கங்குலிக்கு ’Z’பிரிவு பாதுகாப்பு
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான செளரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது.
கங்குலிக்கு இதுவரை Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்தது. அந்த ஒய் பிரிவு பாதுகாப்பு பதவிக்காலம் செவ்வாய்க்கிழமை முடிவடைந்ததைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பை Z பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. புதிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். கங்குலி தற்போது தனது ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பயணம் செய்து வருகிறார். அவர் மே 21 அன்று கொல்கத்தா திரும்புவார். அன்றைய தினம் முதல் அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு கிடைக்கும்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் சிவி ஆனந்த போஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி, தேசிய செயலர் அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும், அமைச்சர்களான ஃபிர்ஹாத் ஹக்கிம், மோலோய் கட்டக் ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் மேற்கு வங்கத் தலைவர் சுகந்தா மஜும்தாருக்கு CISF பாதுகாப்புடன் Z Plus பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.