நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்னிலையில் உள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. 96 கோடி வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தில் அந்த கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியா கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உத்தரபிரதேசத்தில் முன்னிலையில் உள்ளன. சமாஜ்வாதி கட்சி 36 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 34 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.