ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லுக்குப் பதிலாக பம்பையிலிருந்து புறப்படும் தமிழகப் பேருந்துகள் இயக்க திட்டம். நிலக்கல் வரை 20 கி. மீ – க்கு கேரளப் பேருந்துகளில் பயணித்த பின்பே தமிழகப் பேருந்துகளில் ஏற முடியும் என்ற நிலையில் இந்த ஆண்டு பம்பையிலிருந்து தமிழகப் பேருந்துகளை இயக்க கேரளத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
சபரிமலை மண்டல ஜோதி மற்றும் மகர ஜோதியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் 15.11.24 முதல் 16.01.25 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வழக்கமாக சபரிமலைக்கு செல்லும் தமிழக பேருந்துகள் புறப்படும்போது நிலக்கல்லில் இருந்தே பயணத்தை தொடங்கும். தமிழகத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும்போது பம்பை வரை தமிழகப் பேருந்துகள் செல்லும் , ஆனால் மீண்டும் தமிழகம் புறப்படும் போது பம்பைக்கு கீழே உள்ள நிலக்கல்லில் இருந்தே புறப்படும்.
தரிசனம் முடிந்து பம்பை வரை நடந்து வரும் பயணிகள் பின்னர் நிலக்கல் வரை 20 கி.மீ தூரத்திற்கு கேரள பேருந்துகளில் செல்வர் இந்த ஆண்டு பம்பையிலிருந்தே புறப்படும் விதமாக தமிழக பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தகவல் அளித்துள்ளது.
தமிழக பயணிகளை ஏற்றி வரும் விதமாக மகர ஜோதிவரை தொடர்ச்சியாக இரு (தமிழக எஸ்.இ.டி.சி) பேருந்துகள் பம்பையில் நிறுத்தி வைக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பார்க்கிங் பிரச்சனை எழாத வகையில் 2 SETC பேருந்துகளை மட்டும் பம்பையில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் , பேருந்து நிரம்பியவுடன் உடனுக்குடன் 2 பேருந்துகளுக்கு மிகாத வகையில் அடுத்தடுத்து நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பேருந்துகளை எடுத்து வரவும் கேரளத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
நிலக்கல்லுக்கு பதிலாக பம்பையில் இருந்து தமிழக பேருந்துகள் புறப்படுவதற்கு கேரள போக்குவரத்துத்துறை மற்றும் தேவஸ்தானத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக எஸ்.இ.டி.சி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
பம்பையில் இருந்து தமிழக பேருந்துகள் புறப்படுவதன் மூலம் ஐயப்ப பக்தர்களுக்கு பயண அசதி குறையும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.