தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரம்:
மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவேரி ஒழுங்காற்று கூட்டம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு தண்ணீர் திறந்து விடப்படுவது குறித்து முடிவெடுக்க பெங்களூருவில் உள்ள விதான் சவுதா சட்டமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி கே சிவகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி, விவசாயத்துறை அமைச்சர் செலுவராய சுவாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாஜக கட்சி சார்பில் பெங்களூரு நகர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி மோகன், மைசூரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா பங்கேற்றனர். மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் யாரும் பங்கேற்காத நிலையில் பாஜக ஆதரவு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் சுமலதா அம்பிரிஸ், காங்கிரஸ் ஆதரவு விவசாய கட்சி சட்டமன்ற உறுப்பினர் தர்சண் புட்டன்னய்யா, கல்யான ராஜ்ய பிரகதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜனார்த்தனன் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியவுடன் உரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார், கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது என்றும், கர்நாடக மாநிலத்தில் போதிய நீர் ஆதாரம் இல்லாத காரணத்தினால் தமிழகத்திற்கு 1.6.2023 வரை 11.9.2023 வரை 99.86 டி எம் சி நீர் வழங்க வேண்டிய நிலையில் 37.71 டி எம் சி நீர் மட்டுமே வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
தற்பொழுது கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு மாவட்டங்களில் உள்ள நான்கு அணைகளில் 53.28 டி எம் சி நீர் மட்டுமே உள்ளது என்றும் ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு 2023 செப்டம்பர் மாதம் முதல் ஜுலை 2024 வரை குடிநீர் தேவைக்கு 33 டி எம் சி, விவசாயம் செய்ய 70.20 டி எம் சி, இதர தேவைக்கு 3 டி எம் சி என மொத்தமாக 106.21 டி எம் சி நீர் தேவையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சி தலைவர்களும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் அரசு கர்நாடக மாநிலத்தின் நீர் ஆதாரத்தை காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் உறுதுணையாக இருக்கும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா 123 வருட சரித்திரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக மாநிலத்தில் குறைந்த அளவு நீர் பதிவாகி உள்ளதாகவும் எங்களிடம் தமிழகத்திற்கு திறந்து விட போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் நீர் விட முடியாது என்றும் காவிரி ஒழுங்காற்று குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் முறையிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் விவகாரம் தொடர்பாக இன்று இரவு துணை முதல்வர் டி கே சிவக்குமார் டெல்லி சென்று அங்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரம் குறித்து கள ஆய்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒன்றிய நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப் போவதாகவும் தெரிவித்த அவர் ஏற்கனவே காவிரி விவகாரத்தில் கர்நாடக அனைத்து கட்சி குழு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று அவருக்கு கடிதம் எழுதி உள்ள நிலையில் இதுவரை அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை ஆகையால் மீண்டும் ஒருமுறை கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் சந்திக்க கால அவகாசம் கூறி தான் கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசு உடன் திமுக கூட்டணியில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை தாங்கள் சந்தித்து கர்நாடகாவின் நிலை குறித்து ஆலோசிப்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் முதல்வர் சித்திராமையாவிடம் கேள்வி எழுப்பிய நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்தால் அதற்கான தீர்வு கிடைக்காது என்று தெரிவித்தார்.