இந்தியாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த போட்டியாளர் மகுடம் சூடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய போட்டியாளர் இறுதி சுற்றுக்கு முன்னதாகவே வெளியேறினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 71வது உலக அழகிப் போட்டி இம்முறை இந்தியாவில் நடந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 117 இளம்பெண்கள் போட்டியில் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் மராட்டியத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி போட்டியாளராக பங்கேற்றார்.
மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் போட்டியை பிரபல இந்தி சினிமா இயக்குநரும் நடிகருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இப்போட்டி நடைபெறுவதால் இந்தியாவின் சினி ஷெட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
கடந்த 9ம் தேதி மாலை 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது. முன்னதாக உலக அழகிப் போட்டிக்கான சுற்றுகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தன. உடல்நலன் மற்றும் மனநலனை பரிசோதிக்கும் Head-to-head challenge, போட்டியாளர்களின் விளையாட்டுத் திறனை மதிப்பிடும் Sports challenge, திறமைகளை அளவிடும் Talent challenge, அழகை பரிசோதிக்கும் Top Model challenge என பல்வேறு பிரிவுகளில் சுற்றுகள் நடந்து முடிந்தன.
அதன்மூலம் 117 போட்டியாள்ர்களில் இருந்து 14 பேர் தகுதியானவர்களான முடிவு செய்யப்பட்டு, அடுத்தக்கட்ட போட்டிக்கு முன்னேறினர். கடந்த 9ம் தேதி ‘போட்டியாளர்களின் அறிவுத் திறனை’ மதிப்பிடும் சுற்று நடந்தது. இதுதான் உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றாகும். இந்த சுற்றுவரை இந்திய போட்டியாளரான சினி ஷெட்டி இடம்பெற்றிருந்தார். அதனால் அவர் பட்டம் வெல்வார் என்று இந்தியர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் இறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் அவர் லெபனான் அழகியிடம் தோற்று வெளியேறினார். இறுதிச் சுற்றில் நடுவர்களின் கேள்விக்கு சிறப்பாக பதிலளித்து செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றார்.
அவர் பட்டம் வென்ற போது ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று ஆரவாரமாக அவரை கொண்டாடியது. அதை பார்த்து வெற்றியாளர் கிறிஸ்டினா நெகிழ்ச்சி அடைந்தார்.
தற்போது 24 வயதாகும் கிறிஸ்டினா மாடலாக இருந்து கொண்டே சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் குறித்து படித்து வருகிறார். கடந்தாண்டு அழகிப் பட்டம் பெற்ற போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா கிறிஸ்டினாவுக்கு மகுடம் சூட்டி கவுரவித்தார். அதை தொடர்ந்து அவர் கம்பீரமாக மேடையில் கேட் வாக் செய்ததும் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்த 71வது உலக அழகிப் போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் இரண்டாவது இடத்தையும், போட்ஸ்வானாவைச் சேர்ந்த லெஸிகோ சோம்பா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.