புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் 10- ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றக் கட்டப்பட்டுள்ளது. கட்டிடக்கலையில் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 960 கோடி ரூபாய் மதிப்பில் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் அறுகோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ள் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒரே நேரத்தில் சுமார் 1,272 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரலாம்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா, கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 25 அரசியல் கட்சிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு குடியரசு தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.