Homeசெய்திகள்இந்தியாஅரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை செய்யும் பாஜக - திருமாவளவன் குற்றச்சாட்டு!

அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை செய்யும் பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு!

-

அம்பேத்கரின் பெருமையை போற்றுகிற அதே நேரத்தில் அவர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- அரசியலமைப்புச்சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் தொட்டிருக்கும் நிலையில் அதை கொண்டாடும் வகையில் நாடாளுமன்றம் அம்பேத்கரை போற்றி கொண்டாடுகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் 3 ஆண்டுகாலம் அல்லும் பகலும் அயராது உழைத்து, ஒரு சமத்துவ இந்தியாவை கட்டமைக்க நாட்டிற்கு ஒரு அருட்கொடையாக வழங்கியது தான் அரசமைப்புச் சட்டம். இது வெறும் சட்டம் மட்டும் அல்ல. புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான கோட்பாடும் ஆகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை அதனை விளக்குகிறது. சோசியலிசம், செக்யூலரிசம், புளுரலிசம், பெடரலிசம் என்ற இந்த 4 கோட்பாடுகளும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உறுதிகளாகும். அதுமட்டுமின்றி நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நான்கும் புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான தூண்கள் ஆகும். இவற்றை பாதுகாப்பது தான் இன்றைய சவாலாக நம்முன் உள்ளது.

உறுப்பினர்கள் பலரும் அம்பேத்கரை எதிர்த்தது?, அவருக்கு துரோகம்? செய்தது நீயா நானா என்ற வகையில் விவாதம் அரங்கேறியுள்ளது. இந்த 75 ஆண்டு காலத்தில் எந்த அளவிற்கு அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்.  வெற்றிகரமாக அவற்றை நடைமுறைப்படுத்தி, புதிய இந்தியாவை கட்டி எழுப்பியுள்ளோமா? என்பதில் தான் இருக்கிறது. இன்றைய உரையாடலில் அது இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா- மக்களவைச் செயலகத்திற்கு உத்தரவுப் பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கு!
File Photo

அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்படுவதற்கு முதல் நாள் 1949 நவம்பர் 25ஆம் நாள் அரசியல் நிர்ணய சபை முன்பு நிகழ்த்திய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது, 3 ஆண்டுகாலம் உழைத்து உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் குறித்த கவலையை அவர் வெளிப்படுத்தினார். 1950 ஜனவரி 26 அன்று இந்த தேசம் குடியரசு ஆகிவிடும். அது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த தேசத்தின் எதிர்காலத்தை எண்ணி நான் வேதனைப்படுகிறேன். அரசியல் ஜனநாயகத்தை வென்றெடுத்துவிட்டோம், ஆனால் சமூக ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் கேள்விக்குறியாக நிற்கிறது. சுதந்திரம் இல்லாமல் சமத்துவமும், சகோதரத்துவமும் இங்கே நடைமுறைக்கு வராது. சமத்துவம் இல்லாமல் சுதந்திரமும், சகோதரத்துவமும் இங்கே வெற்றிகரமாக இயங்காது. எனவே, இவற்றை தனித்தனியாக பிரித்துவிட முடியாது.

சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தும்போதுதான் இங்கே சமூக ஜனநாயகத்தை நாம் உருவாக்க முடியும். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வை பெற வேண்டும். இது தேசம் என்ற ஒற்றை வடிவத்தை இன்னும் பெறவில்லை. நாம் அனைவரும் ஒரு தேசிய இனம் என்று கூட சொல்ல முடியாது. எதிர்காலத்தில் வர இருப்பவர்கள், நாட்டை விட மத நம்பிக்கை மேலானது என கருதினால் இந்த தேசம் மீண்டும் சுதந்திரத்தை இழக்க நேரிடும். இந்த தேசத்தின் சுதந்திரத்தை நாம் மீண்டும் வென்றெடுக்க முடியாத நிலை உருவாகிவிடும் என்று கவலையை அம்பேத்கர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

75 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்க தரிசனமாக அம்பேத்கரால் உணர முடிந்திருக்கிறது. மத நம்பிக்கை உள்ளவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டால் நாட்டை விட மத நம்பிக்கையே மேலானது என்ற நிலையை அவர்கள் உறுதிப்படுத்தக் கூடும் என்று அம்பேத்கர் சொன்னது இப்போது நடைமுறையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

அம்பேத்கர் வாழ்ந்த இடத்தை நினைவிடமாக மாற்றியுள்ளீர்கள், அவரது உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் 433 அடி உயர சிலை நிறுவி இருப்பது உண்மைதான். அம்பேத்கர் லண்டனில் வாழ்ந்த இடத்தை நினைவிடமாக மாற்றியுள்ளீர்கள். அவர் பெருமையை போற்றுகிற அதே நேரத்தில் அவர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையை இங்கே சட்டமாக்கி உள்ளீர்கள். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான தாக்குதல். ஆனால் பட்டியல் இனத்தவர், பழங்குடியினத்தவர் மற்றும் ஓபிசி மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு சட்டம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ