ஆந்திராவின் திருப்பதியில் உள்ள மூன்று ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மின்னஞ்சலின் தலைப்பில் ‘TN CM ஈடுபாடு’ என கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக்கை கைது செய்ததற்கு பதில் வெடிகுண்டு என்று மிரட்டல் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து போலீசார் மோப்ப நாய்களுடன் ஹோட்டல்களில் தீவிர சோதனை நடத்தினர். பின்னர் இது ஒரு புரளி என்பதை உறுதிப்படுத்தினர்.
லீலா மஹால், கபில தீர்த்தம் மற்றும் அலிபிரி அருகே உள்ள மூன்று தனியார் ஹோட்டல்களுக்கு வியாழக்கிழமை மாலை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. அச்சுறுத்தும் மின்னஞ்சலில் ” ஹோட்டல்களில் வெடிகுண்டு வைக்கக்காரணம் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள். இதில் தமிழக முதல்வர் ஈடுபட்டுள்ளார்.
ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டதன் காரணமாக சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும், இந்த குண்டு வெடிப்பு முயற்சியில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தின் தலையீடு இருப்பதாகவும், கவனத்தை திசை திருப்ப பள்ளிகளில் இதுபோன்ற அட்டூழியங்கள் தேவைப்படுவதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இது புரளி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான உண்மை காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.