ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!
வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
கடந்த 2016- ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த மே மாதம் முக்கிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதாவது, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் திரும்ப செலுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் இன்னும் 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் வங்கியில் ஒப்படைக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்தது. வங்கிகள் மூலம் ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், இது மொத்த ரூபாய் நோட்டுகளில் 96 சதவீதம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.