நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியம் கொண்டு கழுவிய பாஜகவினர்
முற்போக்கு சங்கங்கள் இணைந்து தனியார் கல்லூரியில் நடத்திய நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாஜக மாணவர்கள் அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் இணைந்து ‘திரையரங்கு சினிமா சமுதாயம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினர். இதில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், பேராசிரியர் சந்திரசேகரய்யா, சமூக ஆர்வலர் கே.எல்.அசோக் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தனியார் அமைப்புகளுக்கு கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பாஜக உறுப்பினர்களும், பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கல்லூரிக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சி செய்த அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது. போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து காவல்துறை கல்லூரி வளாகத்தை சுற்றி குவிக்கப்பட்ட நிலையில், தடுப்புகளை அமைத்து காவலை அதிகப்படுத்தினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு நிகழ்ச்சி நடந்த அறையை பாஜக மாணவர் அமைப்பு மாணவர்கள் சிலர் மாட்டின் கோமியத்தை கொண்டு சுத்தம் செய்தனர்.