அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இந்திய வம்சாவழியினருக்கு பெரும் பதவிகளை வழங்கி வருகிறார். இந்தப் பட்டியலில் ஹர்மீத் கே தில்லானுக்கு பதவி கொடுத்துள்ளார். இந்திய-அமெரிக்கரான ஹர்மீத் கே தில்லானை நீதித்துறையின் உதவி அட்டர்னி ஜெனரலாக நியமித்துள்ளார். இதை டிரம்ப் தானே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘‘அமெரிக்க நீதித்துறையில் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக ஹர்மீத் கே தில்லானை நியமிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஹர்மீத் தனது வாழ்நாள் முழுவதும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணித்தவர். ஹர்மீத் அமெரிக்காவின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவர். அவர் டார்ட்மவுத் கல்லூரி மற்றும் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர்.
ஹர்மீத் சீக்கிய சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர். நீதித்துறையில், ஹர்மீத் நமது அரசியலமைப்பு உரிமைகளின் அயராது பாதுகாவலராக இருப்பார். நமது சிவில் உரிமைகள் மற்றும் தேர்தல் சட்டங்களை நியாயமாகவும் தீவிரமாகவும் செயல்படுத்துவார்’’ என்று தெரிவித்தார்.
ஹர்மீத் தில்லான் சண்டிகரில் பிறந்தவர். அவர் குழந்தையாக இருந்தபோது பெற்றோர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். 2016 -ல், கிளீவ்லேண்டில் ஜிஓபி மாநாட்டின் மேடையில் தோன்றிய முதல் இந்திய-அமெரிக்கர் ஆவார்.
டொனால்ட் டிரம்ப் இதுவரை பல பெரிய பதவிகளில் இந்தியர்களை பரிந்துரை செய்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா சிலுக்குரி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆந்திராவை சேர்ந்தவர் உஷா.
செயல்திறனை மேம்படுத்தும் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ராமசாமிக்கும் கேரளாவுடன் தொடர்பு உள்ளது. இவரது பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறி இங்கு பிறந்தவர். இது தவிர கொல்கத்தாவில் பிறந்த ஜெய் பட்டாச்சார்யாவை தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கு டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி தேசிய புலனாய்வு துறை தலைவராக துளசி கபார்டை டிரம்ப் நியமித்துள்ளார். அதிபர் தேர்தலின் போது கபார்ட் டிரம்பை வெளிப்படையாக ஆதரித்தார். டிரம்ப் சமீபத்தில் காஷ் படேலை எஃப்பிஐ தலைவராக பரிந்துரைத்தார்.
நியூயார்க்கில் பிறந்த படேல் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரது பெற்றோர் கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்றாலும். தாய் தான்சானியாவைச் சேர்ந்தவர், தந்தை உகாண்டாவைச் சேர்ந்தவர். 1970ல் கனடாவில் இருந்து அமெரிக்கா வந்தார். அவர் ஒரு பேட்டியில், நாங்கள் குஜராத்திகள். 70 களின் பிற்பகுதியில் குடும்பம் குயின்ஸ், நியூயார்க்கில் குடிபெயர்ந்தது, இது லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படுகிறது.