மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதமேந்திய கும்பலால் 3 குழந்தைகளின் தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் பெரும்பான்மை மெய்த்தி சமூகத்தினருக்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்து, கலவரமாக மாறியது. ஓராண்டும் மேல் நடைபெற்ற வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். வன்முறையின்போது பழங்குடியின பெண் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் மணிப்பூரில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. எனினும் மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் வெடித்து வருகின்றன.
இந்த நிலையில், மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளின் தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிமை இரவு ஜிரிபாம் மாவட்டம் சைராவன் கிராமத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த பெண் ஒருவரை கூட்டு பாலியல் கொடுமை செய்து, கொலை செய்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணின் வீடு உள்ளிட்ட பல்வேறு வீடுகளுக்கு தீ வைத்தனர். தில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் உடலும் எரிந்து சாம்பலான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மணிப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இம்பாலுக்கு சாலை வசதி இல்லாததால், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அசாம் மாநிலம் சில்சார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவம் காரணமாக ஜிரிபாம் மாவட்டத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.