ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு முதற்கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்றும், வரும் நவம்பர் 20ஆம் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளில், மொத்தம் 685 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி 43 தொகுதிகளில் மொத்தம் 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தேர்தலில் சுமார் 1.37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை 7 மணி அளவில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர். இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலையொட்டி மாவோயிஸ்ட்டுகள் நிறைந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி சார்பில் சத்யன் மெகோரி, பாஜக சார்பில் நவ்யா அரிதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.