மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய ரயிலில் புறப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் கடந்த வாரம் செங்கல்ப்பட்டு அருகே தடுத்து நிறுத்தப்பட்டு இரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். மேலும் அவர்களது முன்பதிவு செய்திருந்த ரயில் டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில்,தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,” நரேந்திர மோடி கடந்த முறை பிரதமராக பதவியேற்ற போது, விவசாய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பது, அதேப்போன்று நெல், கரும்பு பயிர்களுக்கு அதிகப்படியான விலை நிர்ணயம் செய்து தருவது ஆகியவை குறித்து உறுதியளித்து இருந்தார். ஆனால் இவற்றில் ஒன்றைக் கூட அவர் செய்து தரவில்லை. மாற்றாக கார்பரேட் கம்பனிகளுக்கு சுமார் 40லட்சம் கோடி கடன்களை மட்டும் பிரதமர் நரேந்திர மோடி தள்ளுபடி செய்துள்ளார்.
எனவே வாராணசி மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த ரிட் மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அதில் வாரணாசியில் 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி முடிவடைந்தது. ஆனால் தங்கள் தரப்பு வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக 20ம் தேதி வரையில் நீட்டிக்க வேண்டும் என்றும். மேலும் வாரணாசிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யும் விதமாக, ரயில் வசதிகள் உட்பட அனைத்தும் செய்து தருமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விளம்பரத்திற்காக இதுபோன்ற செயல்களை செய்கிறீர்கள் இந்த மனுவும் விளம்பரம் தேடத்தான் தாக்கல் செய்துள்ளீர்கள் என்று கூறினர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அய்யாகண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? அங்கு யார் வாக்களிப்பார்கள்? சமூக சேவகர் என்றால் தமிழ்நாட்டில் போட்டியிடுங்கள் என காட்டமாக தெரிவித்து இந்த மனுவை ஏற்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.