தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்களாக போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!
விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி-பஞ்சாப்-ஹரியனா எல்லைப் பகுதியில் UN நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டபோது விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருந்த நிலையில் தற்போது வரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கி உள்ளனர் விவசாயிகள். விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இவ்வகாரத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம், மத்திய அரசின் கதவுகள் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் திறந்திருக்கும் என மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை? எனவும், விவசாயிகளின் குறைகளை கேட்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்பதை ஏன் மத்திய அரசால் தெரிவிக்க முடியவில்லை? எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும் மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிப்பதாக நீதிபதிகள் கூறிய போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவின் நகலை தனக்கு வழங்கும் படியும் அதன் மீது பதிலை பெற்று நீதிமன்றத்தில் வழங்குவதாக தெரிவித்தார். இதனையடுத்து மனு மீதான நகலை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா-வுக்கு வழங்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் மனு மீது 10 நாட்களுக்குள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.