கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? அமலாக்கத்துறை வழக்கில் ஏற்கனவே ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கின் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
டெல்லி புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் 5- மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதே வழக்கில் சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது. ஆனால் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 12ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூரியகாந்த் உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையின் போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, முகாந்திரமே இல்லாமல் பண மோசடி சட்டபிரிவு 45 அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் பெற்ற பிறகு சிபிஐ வழக்கு பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும் சிபிஐ தொடர்ந்த வழக்கில் உள்நோக்கம் இருப்பதாகவும், குறிப்பிட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை போல குற்றம் சாட்டப்பட்டவர்களாக உள்ள மணிஸ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் உள்ளிட்ட பலருக்கும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதத்தை தொடர்ந்து சிபிஐ தரப்பில் வாதத்தை முன் வைத்த சொலிசிட்டார் ஜெனரல் ராஜு, அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு செல்லாமல் நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு ஏன் சென்றார்? என்பது முக்கிய கேள்வியாக உள்ளது என தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரும் விவகாரத்தில் பரமபதம் ஆடியதாகவும், அவரது செல்வாக்கை தவறாக பயன்படுத்தினார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த 5ம் தேதி தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் நாளை இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதாக வழக்கு விசாரணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே ஜாமீன் பெற்ற போதிலும் சிபிஐ வழக்கு காரணமாக தொடர்ந்து நீதிமன்ற காவலில் திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். நாளை உச்ச நீதிமன்றம் சிபிஐ வழக்கிலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினால் நாளையே கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.