
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவையில் நிறைவேறியது.
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 1996- ஆம் ஆண்டு முதல்முறையாக, அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. தேவகவுடா அரசில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது.
பின்னர், 1998- ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து, 1999, 2002, 2003 ஆம் ஆண்டுகளில் மீண்டும் மகளிர் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், நிறைவேறவில்லை.
காவிரி விவகாரம்- மத்திய அமைச்சரை சந்தித்து நச்சுனு ஒரு கேள்வி கேட்டேன்: துரைமுருகன்
கடந்த 2008- ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அரசால் மாநிலங்களவையில், இந்த மசோதா அறிமுகம் செய்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. 2009- ஆம் ஆண்டு நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் 2010- ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
கடந்த 2010- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09- ஆம் தேதி மாநிலங்களவையில் 186-1 என்ற கணக்கில் நிறைவேற்றியும் மக்களவையில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.