திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
போபாலை சேர்ந்த தொழிலதிபர் மீது அவரது இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாதம் ரூ.10 கோடி ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 2-வது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரிந்த கணவரின் சொத்து மதிப்பு ரூ.5,000 கோடி என்றும், அவருக்கு அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல்வேறு தொழில்களும், சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கணவரின் முதல் மனைவி பிரிந்தபோது குறைந்தபட்சம் ரூ.500 கோடி ஜீவனாம்சமாக கொடுத்திருப்பதாகவும், அதே அடிப்படையில் தனக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, பங்கஜ் மித்தல் ஆகிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளனர். திருமணம் தொடர்பாக சட்டத்தில் உள்ள கடுமையான விதிகள் பெண்களின் நலனுக்கானது என்றும், ஆனால் கணவன் மீது பலாத்காரம், கிரிமினல் மிரட்டல், திருமணமான பெண்ணை கொடுமைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்படுவதாக தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
பெண்கள் தங்கள் கைகளில் உள்ள இந்த கடுமையான சட்ட விதிகள் அவர்களின் நலனுக்கான நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் தங்களது கணவர்களை தண்டிக்கவோ, அச்சுறுத்தவோ, ஆதிக்கம் செலுத்தவோ அல்லது மிரட்டி பணம் பறிக்கவோ இதனை பயன்படுத்தக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். சட்ட விதிகளை சில பெண்கள் அவர்களது தனிப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்றும், இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் விசாரணை நீதிமன்றங்கள், குற்றம்சாட்டப்பட்டவரின் வயதான மற்றும் படுத்த படுக்கையான பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டி உட்பட கணவரின் உறவினர்களைக் கூட போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் பிரிந்த கணவரின் சொத்து மதிப்பு ரூ. 5,000 கோடி என்றும், முதல் மனைவிக்கு வழங்கியதன் அடிப்படையில் தனக்கும் ஜீவனாம்சம் வழங்க 2வது மனைவி கேட்டு இருக்கிறார் என்றும், இந்த போக்கு சரியானது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜீவனாம்சம் நிர்ணயம் செய்வது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது என்று குறிபிட்ட நீதிபதிகள், இதில் எந்தவித சூத்திரமும் இருக்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
பரஸ்பர விவாகரத்து ஆணையின் மூலம் இறுதித் தீர்வுக்காக ரூ.8 கோடி வழங்க கணவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், புனே குடும்ப நீதிமன்றம் மனுதாரருக்கு நிரந்தர ஜீவனாம்சத் தொகையாக ரூ.10 கோடி மதிப்பிட்டுள்ளதாகவும், அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ள நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டவர் கூடுதலாக ரூ. 2 கோடி செலுத்த வேண்டியுள்ளது கூறியுள்ளனர். மேலும், அவர் மீது மனைவி தொடர்ந்த அனைத்து குற்ற வழக்குகளையும் ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.