இந்தூரில் Zomato நிறுவன ஊழியர் ஒருவர், இந்து அமைப்பினரால் கட்டாயப்படுத்தி சாண்டா கிளாஸ் உடையை கழற்றச் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் Zomato ஊழியர்கள் சாண்டா கிளாஸ் ஆடை அணிந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியமான பரிசுகளை அளித்து மகிழ்வித்த்னர். இந்த நிலையில், அர்ஜுன் என்ற ஊழியர் சாண்டா கிளாஸ் உடை அணிந்தபடி உணவு டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இந்து ஜாக்ரான் மன்ச் என்ற வலதுசாரி அமைப்பை சேர்ந்த ஒருவர் கேமராவுடன், அவரை நிறுத்தி சாண்டா கிளாஸ் உடை ஏன் அணிந்து வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு அர்ஜுன், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது நிறுவனம் இந்த உடையை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதனை கேட்ட அந்த நபர் ஏன் இந்து பண்டிகைகளின்போது ராமரின் ஆடை அல்லது காவி நிற ஆடைகளை அணிய சொல்வதில்லை என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அந்த மர்மநபர், டெலிவரி ஊழீயரின் பெயரை கேட்கிறார். அவர் அர்ஜுன் என தெரிவித்ததும், அர்ஜுன் அண்ணா நாங்கள் இந்துக்கள், நீங்கள் சாண்டா கிளாஸ் உடை அணிவதன் மூலம் என்ன செய்தியை எங்களுககு சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அர்ஜுனை சாண்டா உடைகளையும், தொப்பியையும் கட்டாயப்படுத்தி அற்றச் செய்துள்ளனர். அவர் அகற்றிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.