திப்பிலி என்பது இந்திய மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது கொடி வகையைச் சார்ந்தது. இதன் செடிகளில் உறுதியான வேர்களும் பூக்கள் மிகச் சிறியதாகவும் காணப்படும்.
திப்பிலி மருந்து பொருட்களில் மட்டுமல்லாமல் உணவுப் பொருட்கள், உயர் ரக மதுபானங்கள், வாசனைப் பொருட்கள் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த திப்பிலி இருமல், தொண்டை புண், காது, மூக்கு தொடர்பான கப நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் உடையது. அதுமட்டுமில்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
திப்பிலி, சுக்கு, மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, அதனை வறுத்து பொடியாக்கி சிறிதளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் ஆகியவை விரைவில் குணமாகும். இதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
திப்பிலியை நன்கு இடித்து பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி அளவு பொடியை தேனில் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமடையும்.
திப்பிலி பொடி, கடுக்காய் பொடி ஆகியவற்றை சம அளவில் எடுத்து தேனில் குழப்பி இலந்தை பழம் அளவில் சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் குணமாகும். இதனை மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
10 கிராம் அளவு திப்பிலி பொடியை எடுத்து அரை மில்லி லிட்டர் பசும்பால் சேர்த்து காய்ச்சி தினமும் இரண்டு வேளைகள் பருகி வந்தால் வாய்வு, இருமல், மூர்ச்சை ஆகியவை குணமாகும்.
திப்பிலியை இடித்து பொடியாக்கி நெய்யில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.
இம்முறைகளை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.