பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் தொற்றினால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த சளி, இருமல் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியங்களே சிறந்தது. இது தவிர மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் 10 நாட்கள் வரை சளி, இருமல் இருந்து கொண்டே தான் இருக்கும். அதே சமயம் சளி குறைய தொடங்கும் போது இருமல் சற்று அதிகமாகும். அதிலும் வறட்டு இருமல் தொண்டை வலி போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில் தான் ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி சாறு, 300 மில்லி லிட்டர் காய்ச்சிய பால், இரண்டு ஸ்பூன் அளவு தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து குடிப்பதனால் வறட்டு இருமலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். அத்துடன் நெஞ்சு சளியும் குறைய தொடங்கும். மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள இஞ்சி சாறு அஜீரண கோளாறுகளையும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யும்.
அடுத்தது தொண்டை வறட்சி வறட்டு இருமலை அதிகமாக்கும். எனவே அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. இல்லையென்றால் எலுமிச்சை சாறு கலந்த தேநீரை குடிக்கலாம். இது இருமலை குறைப்பதற்கான எளிதான வழியாகும்.
பின்னர் வறட்டு இருமலினால் ஏற்படும் தொண்டை வலியை கட்டுப்படுத்த உப்பு நீரை பயன்படுத்தி வாய் கொப்பளிக்க வேண்டும். இது அதிக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் ஈரப்பதத்தை விளக்குவதன் காரணமாக வறட்டு இருமலினால் ஏற்படும் எரிச்சலும் வலியும் குணமாகும். எனவே இருமல் முற்றிலும் குணமடையும் வரை தினமும் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது.
அடுத்தபடியாக பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு அதனை மிதமான சூட்டில் குடித்து வர இருமல் மெல்ல மெல்ல குறைய தொடங்கும்.
குழந்தைகளுக்கு வறட்டு இருமல் இருப்பின் வெற்றிலை, மிளகு, பூண்டு ஆகியவைகளை இடித்து அதன் சாறு கொடுக்க இருமல் குறையும்.
இவ்வாறு இதுபோன்ற சிறந்த வீட்டு நிவாரணிகளை பின்பற்றி இருமலை கட்டுப்படுத்தலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.