தாய்ப்பால் என்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது குறித்து புதிதாக யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் தாய்ப்பாலில் அவ்வளவு ஆரோக்கியமும் இருக்கிறது. அந்த காலத்தில் எல்லாம் பெற்றோர்கள் 10 முதல் 15 குழந்தைகள் வரை பெற்றெடுக்கிறார்கள். எனவே அவர்களின் குழந்தைகளும் கிட்டத்தட்ட பத்து வயது வரை பால் குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதே மிகப்பெரிய சிரமம். இந்நிலையில்தான் பாலூட்டும் தாய்மார்கள் பிரசவத்திற்கு பின்னர் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே அவர்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் உடற்பயிற்சி செய்தால் பால் விநியோகம் பாதிக்கும் போன்ற கட்டுக்கதைகள் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.
அதாவது பாலூட்டும் தாய்மார்கள் உடற்பயிற்சி செய்வது அவர்களின் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பிரசவத்திற்கு பின் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. அத்துடன் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கச் செய்கிறது. மேலும் உடற்பயிற்சி என்பது பால் விநியோகத்தை பாதிக்காது. இருப்பினும் மிதமான உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. ஏனென்றால் பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதினால் நாள் ஒன்றுக்கு 300 முதல் 500 கலோரிகள் வரை இழக்க நேரிடும். ஆதலால் அதிகமான கலோரிகளை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அடுத்தது அதிக அளவில் தண்ணீர் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக விரைவான எடை குறைப்பு உடற்பயிற்சியை தவிர்த்துவிட்டு மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்வது பாலூட்டும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது. ஏனென்றால் தீவிரமான உடற்பயிற்சி செய்வதனால் பாலின் சுவை மாறக்கூடும். மேலும் உடற்பயிற்சி செய்யும் தாய்மார்களின் குழந்தைகளும் உடற்பயிற்சி செய்யாத தாய்மார்களின் குழந்தைகளும் ஒரே மாதிரி தான் வளர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையினால் பாலூட்டும் தாய்மார்கள் உடற்பயிற்சி செய்தாலும் செய்யாவிட்டாலும் தாய்ப்பால் என்பது ஆரோக்கியமான ஒன்றே.
எனவே இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது.