சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி?
சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்ய முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு கப் அளவு வேகவைத்த நூடுல்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் எலும்பில்லாத சிக்கனை நன்கு கழுவி அதனை வேக வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தது சீஸ், ரொட்டி துண்டுகள் ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது வேகவைத்து துருவிய சிக்கன், ரொட்டி துண்டுகள், சீஸ், வெங்காயம், பச்சை மிளகாய் , புதினா, கொத்தமல்லி, துருவிய இஞ்சி, துருவிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். அத்துடன் ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சாட் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து ஒரு ஸ்பூன் சோயா சாஸையும் அத்துடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது உள்ளங்கையில் எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். அதைத்தொடர்ந்து கலந்து வைத்திருக்கும் கலவையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதனை உள்ளங்கையில் போட்டு வட்ட வடிவில் விருப்பமான அளவில் கட்லெட்டுகளை தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் முட்டை ஒன்றை உடைத்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ரொட்டி துண்டுகளை பவுடராக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சூடாகும் நேரத்தில் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை முட்டையில் நனைத்து அதை ரொட்டித் துண்டுகளில் பிரட்டி அதை அப்படியே எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து பொரித்து எடுக்க வேண்டும். இப்போது அருமையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் தயார். இதை தக்காளி சாஸுடன் பரிமாறலாம். எனவே நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.