மன அழுத்தம் என்பது ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அதிகமான அழுத்தத்தை உணரும்போது அது உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் அந்த சூழ்நிலையை சமாளிக்க மேலும் அவருக்கு சக்தியையும் வலிமையும் தரும். ஆனால் இந்த சூழ்நிலை அடிக்கடி தொடர்ந்தால் இது மன அழுத்தமாக மாறிவிடுகிறது.
மனிதர்கள் தங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் சமயத்தில் மன அழுத்தம் உண்டாகிறது. கூட்டம், வேலை, சத்தம், குடும்ப சுமை போன்ற காரணங்களால் ஏற்படும் அழுத்தம் அதிக நாட்கள் நீடித்தால் மன அழுத்தம் உண்டாகி உடல் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. ஓய்வு நேரத்தை திட்டமிட்டு சரியாக செயல்படுத்தாததாலும் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. அதே சமயம் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதாலும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
மன அழுத்தம் வராமல் தடுக்க
வருமுன் காப்பது சிறந்தது என்பது போல மன அழுத்தம் வருவதற்கு முன்பாகவே நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மன அழுத்தம் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கிறது. மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க கண்களை மூடி தியானம் செய்யலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். காற்றோட்டமான இடங்களில் நடக்கலாம். முக்கியமாக தனிமையை தவிர்ப்பது நல்லது. பிடித்தவர்களிடம் பிடித்த விஷயங்களைப் பற்றி மனம் விட்டு பேசலாம். பிடித்த இசையை கேட்கலாம். ஏனென்றால் மனம் வேர் சிந்தனைக்கு செல்வதை தடுக்கும் ஆற்றல் இசைக்கு உள்ளது.
மன அழுத்தம் வந்த பின் காக்கும் முறை
ஒருவேளை மன அழுத்தத்தினால் நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால் நெருக்கமாக பழகும் ஒருவரை அழைத்து உங்கள் மனக் கவலையை அவருடன் பகிர்ந்து கொள்ளலாம். அதை விட்டுவிட்டு அறைக்குள்ளையே முடங்கி கிடப்பது நமக்கு யாரும் இல்லை என்பது போல் சிந்திப்பது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். மேலும் மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்கு வைட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கும் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இருப்பினும் மன அழுத்தத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவரின் பரிந்துரையை பின்பற்றுவது நல்லது.