முடக்கு வாதத்தை குணப்படுத்துவதாகக்கூறி மிருகக்காட்சிசாலையில் புலியின் சிறுநீரை ரூ.600-க்கு விற்கும் விவகாரம் வைரலாகி வருகிறது.
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ‘உலகத் தரம் வாய்ந்த’ விலங்கு பூங்காவான யான் பிஃபெங்சியா வனவிலங்கு மிருகக்காட்சிசாலை, வெள்ளை ஒயினுடன் விலங்குகளின் சிறுநீரைக் கலப்பது “நல்ல மருத்துவ பலன்களை” அளிக்கும் என்று கூறுகிறது. சீனாவில், 250 கிராம் சைபீரியன் புலி சிறுநீர் பாட்டில் 50 யுவான் அதாவது சுமார் 7 டாலர்கள் (சுமார் 600 ரூபாய்)க்கு விற்கப்படுகிறது.
இந்த பாட்டில்களில் எழுதப்பட்ட தகவல்கள், அதன் பயன்பாடு தசை வலி, நாள்பட்ட மூட்டுவலி, சுளுக்கு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது என்று கூறுகிறது. வலி உள்ள இடத்தில் பூசுவதற்கு முன், புலியின் சிறுநீரை ஒயிட் ஒயினில் போட்டு, இஞ்சியை சேர்த்து தடவ வேண்டும் என்று கூறி விற்கிறார்கள்.
மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ”புலிகள் சிறுநீர் கழிக்கும் தளத்தில் சிறுநீர் தேங்குகிறது. பின்னர் சிறுநீர் கழிப்பறையில் இருந்து சேகரிக்கப்படுகிறது. புலி சிறுநீர் விற்கப்படுவதற்கு முன்பு கிருமி நீக்கம் செய்யப்படுகிறதா? என்பது தெளிவாக தெரியவில்லை” என்கிறார்.
இது குறித்து சீன ஊடகங்கள் மருத்துவ நிபுணர்களிடம் பேசியபோது, அவர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். மத்திய சீனாவில் உள்ள ஹூபே மாகாண பாரம்பரிய சீன மருத்துவ மருத்துவமனையின் மருந்தாளர் ஒருவர், ”இந்த சிறுநீரை உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் அதிக விலைக்கு விற்பது சீன மருத்துவத்தை கெடுத்துவிடும்.இதனால் புலிகள் பாதுகாப்பும் பாதிக்கப்படுகிறது. புலி சிறுநீர் பாரம்பரிய மருந்து அல்ல.அது நிரூபிக்கப்பட்ட மருத்துவப் பலனைக் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார்.
மற்றொரு பாரம்பரிய சீன மருத்துவர், ”புலி சிறுநீரை விற்க உயிரியல் பூங்காக்களுக்கு அனுமதி உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த மிருகக்காட்சிசாலை, ”வணிக உரிமம் உள்ளது” என்று கூறியுள்ளது.சீன சமூக ஊடக தளங்களில் பல பயனர்கள் இந்த சிறுநீர் குறித்த தங்கள் எதிர்வினைகள், அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். ”நான் இந்த பொருளை என் தந்தைக்காக வாங்கினேன். ஆனால் அது அவருக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இன்னொன்று இந்த பாட்டிலை என் அம்மாவுக்கு வாங்கித் தர நினைக்கிறேன்.ஏனென்றால் அதில் காணக்கூடிய தீமைகள் எதுவும் இல்லை. எனவே நான் அதை முயற்சிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர்,”சிறுநீரால் பாக்டீரியா பரவாதா? அதை நினைத்தாலே எனக்கு வருத்தமாக இருக்கிறது. சீன கலாச்சாரத்தில், புலி தைரியம், வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது.சில சீன நூல்களில் எலும்பு நோய் முதல் வலிப்பு, மூட்டுவலி வரை அனைத்தையும் புலியின் சிறுநீரால் குணப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.