மழைக்காலத்தில் சளி, இருமல் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை:
மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. இருப்பினும் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம். ஏனென்றால் மழைக்காலத்தில் தான் டெங்கு காய்ச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். மழைநீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். மழை நீரில் கொசுக்கள் முட்டையிடுவதால் மழை நீரை அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டும். எனவே நோய் தொற்றை பரப்பக்கூடிய கொசுக்களை விரட்ட வேப்பிலை, நொச்சி, துளசி போன்ற இலைகளை பயன்படுத்தி புகைமூட்டம் போட்டு கொசுக்களை விரட்டலாம்.
அடுத்தது இன்ஃப்ளுயன்சா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வெளியில் சென்று வந்த பின்னர் கை, கால்களை நன்கு கழுவ வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் காய்ச்சி ஆற வைத்த நீரை பருகுவது அவசியம். மேலும் நாம் உண்ணும் உணவுகளில் மிளகு, சீரகம், மஞ்சள் தூள், சுக்கு ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது. மழைக்காலங்களில் வெளியில் கிடைக்கும் எந்த பொருளையும் சாப்பிடக்கூடாது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குழந்தைகளுக்கு துளசி சாறும் தேனும் கலந்து கொடுக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.