பிள்ளை கற்றாழை என்பது ஒரு மூலிகை வகையாகும். இதனை காய்கறிகளைப் போல சமைத்து உண்ணலாம். அதிலும் குறிப்பாக மூல நோய் இருப்பவர்கள் இந்த மூலிகையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பிள்ளை கற்றாழையின் உள்ளே உள்ள தசையை கற்றாழை சோறு என்பார்கள். இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் கசப்பு தன்மை உடையதாக இருக்கும். ஆகையால் இதனை ஏழு முதல் எட்டு முறை நீர் விட்டு நன்கு கழுவி விட வேண்டும். இவ்வாறு அதிக முறை கழுவுவதினால் அதில் உள்ள கசப்பு தன்மை நீங்கி உண்பதற்கு ஏதுவாக இருக்கும்.
இப்போது அந்த பிள்ளை கற்றாழை சதையுடன் உப்பு மற்றும் புளி ஆகியவற்றை அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிள்ளை கற்றாழை நன்கு வெந்தபின் அடிப்பினை அணைத்து இறக்கி விட வேண்டும்.
குறிப்பு:
1. பிள்ளை கற்றாழையை சமைக்கும்போது அதில் காரம் சேர்க்கக்கூடாது.
2. மேலும் இந்த கற்றாழை சோறு குளிர்ச்சி தன்மையும் சீத வீரியமும் உடையது. எனவே இது உஷ்ணம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பல நோய்களுக்கும் இது உதவுகிறது. சித்த வைத்திய முறைகளில் பஸ்ப செந்தூரங்கள் தயாரிப்பதில் இந்த பிள்ளை கற்றாழை சோறு சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.