நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உடலில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் சத்துக்கள் குறைபாட்டினால் தலைமுடி அதிகமாக உதிர்வதை காண முடிகிறது. அது மட்டும் இல்லாமல் இப்பிரச்சனை இளம் வயதினருக்கும் இருக்கிறது. இந்நிலையில் பாட்டி சொன்ன சில அழகு குறிப்புகளை பின்பற்றி தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
1. முதலில் 5 முதல் 6 சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்து சாறு எடுத்து அந்த சாறை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் சிகைக்காய் போட்டு தேய்த்து நன்கு அலசி குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் தலை முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.
2. சிறிதளவு வெங்காய சாறு எடுத்து அதனை ஒரு லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்த பிறகு கலந்து வைத்துள்ள கலவையை வைத்து தலை முடியை அலச வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை தலைக்கு குளிக்கும் சமயங்களில் செய்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும். இம்முறையை பின்பற்றும்போது வெங்காயத்தின் வாசனை தலையில் இருந்து கொண்டே இருக்கும். அதனால் தினமும் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது நல்லது.
3. ஒரு ஸ்பூன் அளவு வெங்காய சாறு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த எண்ணையை தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் சிகைக்காய் போட்டு தேய்த்து குளிக்க வேண்டும் . இம்முறையை வாரம் ஒரு முறை பின்பற்றினால் போதுமானது.
இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.