கடந்த பல வருடங்களுக்கு முன்பாக செல்போன் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நுழையாத காலகட்டத்தில் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவார்கள். மண்ணில் கை வைத்து விளையாடும் போது அதிலுள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு பரவினாலும் அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானது. ஆனால் தற்போது வளரும் குழந்தைகள் எந்தவித உடல் அசைவும் இல்லாமல் வீட்டிலிருந்தபடியே செல்போன் போன்ற மின்னணு திரைகளில் தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிலும் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை செல்போன் காட்டியே சாப்பாடு ஊட்டுகிறார்கள் இன்றைய தலைமுறைய தாய்மார்கள்.
அப்படி சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு மின்னணு திரைகளை காட்டுவதால் அவர்கள் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வருவது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கிறது. எனவே சாப்பாடு ஊட்டும் போது அவர்களை வெளியில் அழைத்து சென்று அவர்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும். இதனால் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கலாம்.
அதே சமயம் 2 முதல் 5 வயது குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே மின்னணு திரைகளை பார்க்க அனுமதிக்கலாம். 6 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் அனுமதிக்கலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு காட்டும் திரை நேரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தால் குழந்தைகளை மன அழுத்தத்தில் இருந்து வெளியில் கொண்டு வரலாம். இன்றைய தலைமுறைய தாய்மார்கள் இதை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- Advertisement -