குழந்தைகள் பெரும்பாலும் ஹார்லிக்ஸ் போன்ற ஹாட் ட்ரிங் வகைகளை விரும்புவார்கள். எனவே கடைகளில் கிடைக்கும் ஹார்லிக்ஸ் வகைகளை வாங்கி பாலில் கலந்து கொடுப்பது வழக்கம். ஆனால் அது போன்ற பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க, சில கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே நம் குழந்தைகளுக்கு நாமே வீட்டில் மிகவும் எளிமையான முறையில் ஹார்லிக்ஸ் தயார் செய்து கொடுக்கலாம்.
ஹார்லிக்ஸ் தயார் செய்ய முதலில் ஒரு லிட்டர் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 40 நிமிடங்கள் கழித்து தண்ணீர் எல்லாம் பற்றி பால், பால்கோவா பதத்திற்கு வரும். அப்போது அந்த பால்கோவாவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றி சில மணி நேரம் வெயிலில் காய வைக்க வேண்டும். காய வைத்ததை அப்படியே ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் போட்டு 100கிராம் அளவு சர்க்கரை சேர்த்து அரைத்தால் நமக்கு பால் பவுடர் கிடைக்கும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தது 200 கிராம் அளவு கோதுமை மாவினை சலித்து எடுத்துக்கொண்டு அதனை கடாயில் கொட்டி மிதமான தீயில் வறுத்து எடுக்க வேண்டும். அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றிய பிறகு 50 முதல் 100 கிராம் பாதாமையும், வேர்க்கடலையையும் இதே போன்று வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கோதுமை மாவு, பாதாம், வேர்க்கடலை ஆகியவற்றை 1தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதனையும் பால் பவுடரையும் கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைப்பு கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இது குழந்தைங்களுக்கு ஆரோக்கியமானதும், பாதுகாப்பானதும் கூட.
(குறிப்பு: கோதுமை மாவினை வறுக்கும்போது கலர் மாறும் முறை வறுக்க வேண்டும். கோதுமை மாவு சரியாக வறுபடாமல் இருப்பின் அது குழந்தைகளுக்கு வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும்)