சாதாரண தரையில் கூட கொடி போன்று படர்ந்து வளரக்கூடியவை தான் மூக்கிரட்டை கீரை. பலர் இந்த கீரையை ஆடு, மாடுகள் சாப்பிடுவது என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கீரை மற்ற கீரைகளைப் போலவே பல மருத்துவ பயன்களை உடையது. அந்த வகையில் சிறுநீரக கற்களை கரைப்பது, வாத பிரச்சனைகள், கண் பார்வை பிரச்சனைகள் என பல பிரச்சினைகளுக்கு இந்த மூக்கிரட்டை கீரை மருந்தாக பயன்படுகிறது. மேலும் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்களும் இந்த மூக்கிரட்டை கீரையில் இருக்கிறது.
1. மூக்கிரட்டை கீரையுடன் இரண்டு பெரிய அல்லது சிறிய வெங்காயம், இரண்டு
அல்லது மூன்று பூண்டு, அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் மிளகு மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். பின் அதனை வடிகட்டிய நீரை பருகி வந்தால் சிறுநீரக கல் பிரச்சினையை விரைவில் சரி செய்யலாம். வாரம் இரண்டு முறை இந்த மூக்கிரட்டைச் சாற்றை பருகலாம்.
2. மூக்கிரட்டை கீரையின் இலைகளை காய வைத்து பொடியாக்கி, அந்த பொடியை 1 ஸ்பூன் அளவு தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதனை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகுவதால் குடலில் இருக்கும் கிருமிகள் வெளியேறும்.
3. மூக்கிரட்டை கீரையை தண்ணீர் தெளித்து மைய்யாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதனை தோசைமாவில் கலந்து வெங்காய தோசை அல்லது ஊதாப்பம் போன்று செய்து சாப்பிடலாம். இவ்வாறு செய்து சாப்பிட்டால் கீரை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இவ்வாறு இந்த மூக்கிரட்டை கீரையை மருந்தாகவும், உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இதனை நீங்கள் ஒரு முறை செய்து பார்த்து விட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் வாரத்திற்கு ஒரு முறையாவது இதை உண்ணுங்கள். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.