“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறியது பெருமைப்படும் விதமாக இருந்தாலும் ஆனால் எதார்த்தங்கள் அப்படி அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பெண்கள் அன்று முதல் இன்று வரை பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்பட வேண்டும் என்று எத்தனை சட்டங்கள் வந்தாலும் சமூகத்தில் பெண்களுக்கு அதற்கான தீர்வு கிடைப்பதில்லை. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, ஆணாதிக்கம், அடக்குமுறை, பாகுபாடு, ஏற்றத்தாழ்வு என பலவும் பெண்களை இன்று வரையிலும் பின்தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதையெல்லாம் கடந்து உலகத்தில் பல பெண்கள் சாதித்து வந்தாலும் இந்த காலத்திலும் கூட பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் ஒரு அடிமை போல் நடத்தும் வழக்கமும் இருக்கிறது.
அதிலும் மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையல் அறைக்குள் செல்லக்கூடாது, கோவிலுக்குள் செல்லக்கூடாது, அதைத் தொடக்கூடாது, இதை தொடக்கூடாது என கண்டிஷன் போடுகின்றனர். தீட்டு என்ற அந்த மாதவிடாயிலிருந்து தான் நாம் பிறந்திருக்கிறோம் என்பதை அனைவருக்கும் மறந்து விடுகின்றனர். பெண்கள் மாதவிடாய் காலத்தில் எவ்வளவு சிரமங்களையும் எத்தனை வலிகளையும் அனுபவிக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அப்படியே தெரிந்தாலும் அவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ள தவறுகிறார்கள். அதனால் பெண்கள் பலரும் மாதவிடாய் நேரத்தில் தங்களை தானே பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஆதலால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தன்னை தானே கவனித்துக் கொள்ளும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு போதுமான அளவு ஓய்வு வேண்டும். நிம்மதியான தூக்கம் வேண்டும்.
கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
சூடான நீரினால் வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது நல்லது.
இரவு ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை குடித்து வர வயிற்று வலி குறையும் வாய்ப்புள்ளது.
மாதவிடாய் நேரத்தில் காரம் நிறைந்த உணவுகளை சேர்ப்பதை தவிர்த்து விட வேண்டும்.
மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு நாப்கின்களை மாற்ற வேண்டும்.
கை, கால், தலைவலி, உடம்பு வலி இருப்பின் வெதுவெதுப்பான நீரினால் குளித்து வரலாம்.
பயறு வகைகள், தானிய வகைகள் போன்றவற்றை மாதவிடாய் சமயத்தில் எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தையும் வலிமையையும் தரும்.
நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்.
இருப்பினும் அதிக தொந்தரவு ஏற்பட்டால் மருத்துவரையும் உடனடியாக அணுகுவது மிகவும் நல்லது.