நாம் உண்ணும் உணவு வகைகளை விரைவில் செரிமானம் அடைய செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் எனும் அமிலம் சுரக்கும். இந்த அமிலம் அதிகமாக சுரக்கும் காரணத்தால் இரைப்பை மற்றும் சிறுகுடல் சுவர்களில் உள்ள மியூகோசா படலம் சிதைந்து புண்கள் உண்டாகும். இதற்கு தான் அல்சர் என்று பெயர். அல்சரில் கேஸ்டிரிக் அல்சர், டியோடினல் அல்சர் என இருவகைகள் உண்டு.
அல்சர் எதனால் ஏற்படுகிறது என்றால் நேரம் தாழ்ந்து சாப்பிடுவதாலும், சாப்பிடாமல் இருப்பதனாலும், அதிக சூடான மற்றும் காரமான பொருட்களை சாப்பிடுவதாலும் அல்சர் ஏற்படுகிறது. மேலும் கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை உண்பதாலும் இந்த அல்சர் உண்டாகிறது.
அல்சர் வராமல் தடுக்கும் முறைகள்:
அதிகமான காய்கறிகளையும் பல வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக காலை உணவை தவிர்க்க கூடாது. நேரம் தாழ்ந்து சாப்பிடக்கூடாது.
மசாலா நிறைந்த உணவு வகைகளையும் கார உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல் பழக்கம் கூடாது. அத்துடன் விரைவு உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
அல்சர் நோய் வந்த பின் செய்ய வேண்டியவை:
இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது.
ஒரே வேளையில் அதிக உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து இடைவெளி விட்டு உணவு உண்ண வேண்டும்.
உணவில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது.
வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் மருந்து வகைகளை சாப்பிடக்கூடாது.
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அல்சரின் காரணமாக வலி ஏற்பட்டால் உடனடியாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் அமிலமானது நீர்த்து போகும்.
இருந்த போதிலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் பரிந்துரையின்படி உணவு முறைகளை பின்பற்றுவது மிகவும் நல்லது.