சிறுநீர் பாதை தொற்று -UTI (Urinary Tract Infection) என்பது இ- கோலை போன்ற
சில வகை பாக்டீரியாக்களினால் உருவாகிறது. இது பொதுவாகவே ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண் குழந்தைகளும் சிறுநீர் பாதை தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் பெண்களுக்கு மட்டுமே ஆசனவாய் துவாரமும், பெண்ணுறுப்பும் அருகருகே இருப்பதால் இந்தத் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இந்த சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கும்போது வலியும் எரிச்சலும் உண்டாகும். அதே சமயம் காய்ச்சல், வாந்தி, முதுகு வலி, அடிவயிற்று வலி, சிறுநீரில் அதிக அளவு புரதம் வெளியேறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அதாவது இது சாதாரண சிறுநீர் பாதை தொற்றாக இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும். ஆனால் அதுவே இந்த தொற்றை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் சிறுநீரகமே செயலிழக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால் சிறுநீர் பாதை தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நாளடைவில் வளர்ச்சி அடைவதால் அது சிறுநீர் பாதையில் தங்கி சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே சிறுநீர் கழிக்கும்போது ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் மருத்துவர்கள் சிறுநீர் பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்கள். அதன்படி ROUTINE மற்றும் CULTURE/ SENSITIVITY ன இரண்டு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதில் எந்த மாதிரியான பாக்டீரியாக்கள் வளர்கின்றன என்பதை கண்டறிந்து அதற்கேற்றார் போல் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் குறைந்தது 7 முதல் 10 நாட்களாவது எடுத்துக் கொள்வது அவசியம். சரியான முறையில் மருந்துகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே ஆரம்பத்திலேயே சிறுநீர் பாதை தொற்றை குணப்படுத்தலாம். அதே சமயம் சிறுநீர் பாதை தொற்று என்பது அடிக்கடி ஏற்பட்டாலோ அதை புறக்கணிக்காமல் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது மிகவும் சிறந்தது.