பொதுவாக சிறுநீரில் சில புரதங்கள் வெளியேற்றப்படலாம். ஆனால் அதிக அளவில் புரதங்கள் வெளியேற்றப்படுவது ஆபத்தானது. அதாவது சிறுநீரில் புரத இழப்பு என்பதை மருத்துவத்தில் புரோட்டினுரியா என்று சொல்வர்.
புரோட்டினுரியா ( சிறுநீரில் புரதம் வெளியேறுவது) சிறுநீரகம் தொடர்பான நோய்களின் அறிகுறியாக சொல்லப்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் நம் ஆரோக்கியத்தை பாதித்து தீங்கு விளைவிக்கும். இந்த பிரச்சனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது.
அதாவது நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரில் புரதம் வெளியேறும். அதேபோல் சிறுநீர் பாதை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறுநீரில் அதிக அளவு புரதம் வெளியேற்றப்படும். ஆனால் இது தற்காலிகமானது. சிகிச்சைக்கு பின்னர் சிறுநீரில் புரத இழப்பு சரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறுநீரில் புரதம் வெளியேறுவதை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
சிறுநீரில் புரதம் வெளியேறுவதை வீட்டில் இருந்தபடியே கண்டுபிடிக்கலாம். நம் சிறுநீரை சிறிய பாட்டிலில் எடுத்து அதை மூடி ஒரு நிமிடம் வரை குலுக்க வேண்டும். அதன் பின்பு பார்த்தால் அதில் அதிக நுரை இருக்கும். நீண்ட நேரங்களுக்கு அந்த நுரை அப்படியே இருக்கும். ஆனால் புரதம் அதிகம் வெளியேறாத சிறுநீரில் ஆரம்பத்தில் நுரை தெரிந்தாலும் சிறிது நேரம் கழித்து அது மறைந்துவிடும். இவ்வாறு எளிதில் சிறுநீரில் புரதம் வெளியேறுவதை கண்டுபிடிக்கலாம். அப்படி இல்லை என்றால் சிறுநீர் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.