இன்று (நவம்பர் 14) உலக நீரிழிவு தினம்.
நீரிழிவு நோய் என்பது இன்று பலரையும் பாதிக்கிறது. அதாவது வயதானவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோரையும் பாதிக்கிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, காலை உணவை தவிர்ப்பது போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் உண்டாகக்கூடும். மேலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து விடுகிறது. தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து இருக்கலாம். அதேசமயம் போதுமான அளவு தூக்கம் வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
மேலும் உலக நீரிழிவு தினமான இன்றும் இன்று முதலும் நீங்கள் செய்ய வேண்டியவை:
காலை உணவை தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடும் போது நான்கு இட்லி சாப்பிடும் நேரத்தில் இரண்டு இட்லியும் இரண்டு வடையும் சாப்பிட்டால் நல்லது. நாம் முதலில் புரோட்டின் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் பாதி வயிறு நிரப்பி விடும். அதன் பின்னர் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டையே நம் உடல் எடுத்துக்கொள்ளும். இதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கலாம்.
அடுத்தபடியாக நன்கு பசித்த பின் உண்ண வேண்டும். ஒருவேளை உணவிற்கும், மற்றொரு வேலை உணவிற்கும் இடையில் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் இடைவெளி இருக்க வேண்டும். இதன் மூலம் செரிமான தன்மை மேம்படுத்தப்படும்.
அடுத்தது முக்கியமான ஒன்று, நீரிழிவு நோய் உடையவர்கள் வருடா வருடம் கண்களை பரிசோதித்தல் நல்லது. அதாவது மற்றவர்களை விட நீரிழிவு நோய் உடையவர்கள் கண்களை கவனமாக பாதுகாப்பது அவசியம். ஏனென்றால் நீரிழிவு நோயினால் ரெட்டினோபதி என்று சொல்லப்படும் கண் சம்பந்தமான பிரச்சனை, குருட்டுத்தன்மை போன்றவைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே உலக நீரிழிவு தினமான இன்று உங்கள் கண்களைப் பரிசோதனை செய்வது நல்லது. இனிவரும் நாட்களிலும் மேற்கண்ட குறிப்புகளை கவனத்தில் வைத்து அதனை பின்பற்றுவது மிகவும் சிறந்தது.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.