தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் அதிகளவில் புதுச்சேரி, நாகாலாந்து, சிக்கிம் மற்றும் கர்நாடகா, போன்ற தொலைதூர மாநிலங்களின் பதிவு எண் கொண்டவையாக உள்ளன. பல்வேறு வெளிமாநிலப் பதிவு எண்கள் கொண்ட 600 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளால் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர். மேலும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வந்தது.
ஆம்னி பேருந்து சங்கத்தினரின் நீட்டிப்பு கோரிக்கையை கருத்தில் கொண்டு அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது.
தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பஸ்கள் மாநிலத்தில் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை அறிவித்திருந்தது. பின்னர் பக்ரீத் விடுமுறையை யொட்டி இந்த அவகாசம் 17-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தடையை மீறி இயக்க திட்டமில்லை என்றும் தமிழகத்தில் மறு பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.
பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் – அமெரிக்க சுகாதார நிபுணர்கள்
அப்போது பேசிய அவர், 2020 ஆம் ஆண்டு முதல் தான் படுக்கை வசதி கொண்டு பேருந்துகளுக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. பல பேருந்துகளுக்கு வேறு மாநிலங்களில் பதிவு செய்திருந்த நிலையில் தற்பொழுது பாதி பேருந்துகளுக்கு மேல் தமிழ்நாட்டில் பதிவு செய்து விட்டோம் என்றார்.
மேலும், மீதமுள்ள 500 க்கும் மேற்பட்ட பேருந்துகளை மறுபதிவு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டுமென கேட்டதாகவும், அதற்கு அரசு தரப்பில் காலநீட்டிப்பு செய்யமுடியாது என்று தெரிவித்ததாக அன்பழகன் கூறியுள்ளார்.
தடையை மீறி பேருந்துகளை இயக்க திட்டமில்லை என்றும், ஒரு பேருந்தை பதிவு செய்வதற்கே ஒரு மாதம் வரை கால அவகாசம் எடுப்பதால், மீதம் இருக்கும் பேருந்துகளை பதிவு செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
கேரளப் போன்ற மாநிலங்களில் ஒரு நாளிலேயே பதிவு செய்து பேருந்து ஓட்ட முடியும் நிலை இருப்பதால், அது போன்று விரைவாக மறுபதிவு செய்ய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பயணிகள் பாதிக்காத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் வாகன உரிமையாளர்களுக்கு இருப்பதால் இது குறித்து வாகன உரிமையாளர்களிடம் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்க இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.