வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் கருத்துகேட்பு கூட்டம் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து உண்மைக்கு புறம்பானது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை நடத்திய இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் மாநில அரசு பிரதிநிதிகள், வக்ஃப் வாரியம், மாநில சிறுபான்மையினர் ஆணையம், இதர சம்பந்த்தப்பட்ட அமைப்புகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் பிரதிநிதிகள், பார் கவுன்சில் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், முத்தவல்லி மற்று உலமாக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இது தவிர இதர பங்கேற்பாளர்களாக மக்களவை செயலகத்தின் அனுமதி பெற்று விவசாயிகளின் பிரதிநிதிகள், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரவித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே எதிர்க்கட்சித்தலைவர் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளை அழைக்காமல் அரசு புறக்கணித்தது என்று தெரிவித்துள்ளது உண்மைக்கு மாறானது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.