விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் கடலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் விழுப்புரம் வழுதரெட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 42) என்பவருக்கும் கடந்த 2018-ல் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது சம்பத்திடம், போலீஸ் பாண்டியன் தனக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலருடன் நன்கு பழக்கம் இருப்பதாகவும், உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள், அவர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாககூறியதோடு சில அரசு பணி நியமன உத்தரவுகளையும் காண்பித்துள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய சம்பத், பாண்டியனிடம் தனது மகன் ஞானவேல் பி.இ. படித்து முடித்துள்ளதாகவும் அவருக்கு அரசு வேலை வாங்கித் தரும்படியும் கேட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதற்கு பணம் செலவாகும் என்று பாண்டியன் கூறியதால் சம்பத், பாண்டியனின் வங்கிக் கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், நேரடியாக ரூ.2 லட்சத்தையும் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றக் கோண்ட போலீஸ் பாண்டியன், வாக்குறுதி அளித்தப் படி ஞானவேலுக்கு அரசு வேலை ஏதும் வாங்கித்தராமல் காலம் தாழ்த்தி ஏமாற்றியுள்ளார். வருடக் கணக்கில் ஆனதால் பலமுறை பணத்தை திருப்பித் தரும்படி கேட்டும் பணத்தை கொடுக்காமலும், ஞானவேலுக்கு அரசு வேலை வாங்கித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்தது தெரிந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாமல் சம்பத், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாண்டியன் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய போலீஸ்காரரே, பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.