விசிக தலைவரும், எம்.பி-யுமான சென்னையில் திருமாவளவன் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நடத்தி வருவதாக குற்றம்சாட்டி இருந்தார் அண்ணாமலை. ஆனால், அதனை அடிடோடு மறுத்து இருக்கிறார் திருமாவளவன்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ள திருமாவளவன், ”அண்ணாமலை ஒவ்வொரு நாளும், ஒவ்வொன்றையும் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஒரு நாகரிக அணுகுமுறை என்பதை முற்றாகத் தவிர்த்து விட்டு, யாரையும், எப்படியும் விமர்சிக்கலாம் என்கிற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அதை வைத்து அவர் அரசியல் செய்கிறார். அவரது அணுகுமுறை என்பது வியப்பாக இருக்கிறது. இரட்டை வேடம் போட வேண்டிய ஒரு நிலை எனக்கு இல்லை. எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் பள்ளி நடத்துவதற்கு அனுமதி கேட்டு இருக்கிறார்கள்.
அவ்வளவுதான்… அதற்கு இன்னும் அப்ரூவல் வாங்கவில்லை. எந்த வேலையும் நடக்கவில்லை. ஒரு மாணவன்கூட வந்து பள்ளியில் சேரவில்லை. முதலாம் வகுப்பு கூட அங்கு கிடையாது. ஒரு மாணவர் கூட அங்கு சேரவில்லை. அறிவிப்பு மட்டும் வெளியே வந்திருக்கிறது, அவ்வளவுதான். அந்த இடம் என்னுடைய இடம் என்பதால் என்னுடைய பெயரை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் மாநிலத்துக்கு இந்திய ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?
இவருக்கு உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், அந்த மாணவர்களின் நலனில் அவருக்கு பொறுப்பு இருந்தால் இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை கேட்டு தர வேண்டும். அதற்கெல்லாம் அண்ணாமலை குரல் கொடுக்கவில்லை. அதேபோல் தனியார் நிறுவனங்கள் சிறுபான்மைடினருக்காக சார்ந்து நடத்துகின்ற லயோலா போன்ற கல்வி நிறுவனங்கள் விளிம்பு நிலை மக்களுக்காக நடத்தப்படுகிற கல்வி நிறுவனங்களாகும். இதிலே நிறைய எஸ்சி/எஸ்டி மாணவர்கள், சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவர்கள் வாய்ப்புகளை பெற்று படித்து வருகிறார்கள். இந்த மாதிரியான கல்வி நிறுவனங்களுக்கு முறையாக நிதி வருவதில்லை.
நான் பன்மொழிக் கொள்கையை வரவேற்கக் கூடியவன். எனக்கு இந்தி மீது வெறுப்பு கிடையாது. எந்த மொழி மீதும் வெறுப்பு கிடையாது. அன்னைத் தமிழை காப்போம். அனைத்து மொழிகளையும் மதிப்போம் என்றும் முழங்கியவர்கள், முழங்கிக் கொண்டிருப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். எங்களுக்கு எந்த இனத்தின் மீதும், எந்த மொழியின் மீதும் வெறுப்பு இல்லை.
ஆனால், இந்தியை, இந்தியாவின் மூளை முடுக்கெல்லாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயமும், தேவையும் எங்கிருந்து வந்தது? இதைத்தான் நாங்கள் சொல்கிறோம், இதை ஏழை மாணவர்கள் படிக்காவிட்டால் என்ன? ஏழை மாணவர்கள் இந்தி படித்தால் வேலை கிடைத்து விடுமா? இந்த வாதமே தவறு” என அவர் தெரிவித்தார்.