அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி… தமிழகத்தின் வெற்றியே காரணம் – தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றதால்தான் பிரதமர் மோடி செங்கோலை தவிர்த்து இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை வணங்கினார் என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் முத்தமிழ் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடம் பிடித்த மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், திராவிட மாடல் ஆட்சி நடத்துகின்ற நம்முடைய முதல்வர் அவர்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 40-க்கு 40 இடங்களில் வென்று இருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி-யை விட நான் தான் அதிக மக்கள் பணி செய்யப் போகிறேன் என்ற தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு தமிழச்சி தங்கபாண்டியன் பதில் அளித்துள்ளார்.
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர், தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தென்சென்னை வாக்காளர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.
தொடர்ச்சியாக மக்களுக்காக திமுக நின்றுள்ளது. 40 இடங்களில் இங்கே திமுக வென்றதால்தான் மத்தியிலே மைனாரிட்டி அரசு அமைந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என்ற பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. அதற்கான முதல் அடியை தமிழ்நாடு கொடுத்துள்ளது.
வேளச்சேரி சென்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. அதை விரைவாக மக்களுக்கு கொண்டு வர வேண்டும், சுங்கச் சாவடி கட்டணம் குறைக்கப்பட வேண்டும், சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என தொடர்ந்து நாங்கள் சொல்லி வருகிறோம், தொடர்ந்து இதை வலியுறுத்துவோம். பெண்களுக்கான கவுன்சிலிங் சென்டர் தொகுதியில் மூன்று இடங்களில் அமைக்கப்படும், தொகுதி அலுவலகம் எப்போதும் திறந்து இருக்கும். எந்த நேரம் வேண்டும் என்றாலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை சொல்லலாம்.
நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (apcnewstamil.com)
நீட் தேர்வு போன்ற உலகத்தில் பயன்படாத தேர்வு ஒன்று உள்ளதா, நீங்கள் அதில் பூஜ்ஜியம் வாங்கினால் கூட சென்று படிக்கலாம் சென்ற வருடம் அது நடந்தது. தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்கள். நீட் தேர்வு அவசியமற்றது. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வாய்ப்பை அடியோடு பறிக்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெரும் வரை முதலமைச்சர் தொடர்ந்து போராடுவார் என்று கூறினார்.
இந்தியாவிலேயே 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஒரே கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி தான். அதனால்தான் பிரதமர் மோடி செங்கோலை தவிர்த்து இந்திய அரசியலமைப்பை வணங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று கூறினார்.