வாச்சாத்தி சம்பவம், போராளி கலியபெருமாள், அரியலூர் ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் ஆகியவற்றை வைத்து வெற்றிமாறன் இயக்கி இருக்கும் விடுதலை திரைப்படம் குறித்து, ‘’தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது’’ என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
அவர் மேலும், ‘’அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச்சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது.
தோழர் வெற்றி.மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது ‘வெற்றிமாறன் படைப்பு’ என முத்திரை பதித்துள்ளார்’’ என்று கூறியிருக்கிறார்.
இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார். அவர், ‘’சிறப்பு! மொத்தத்தில் இன்றைய திமுக அரசின் பிரதிபலிப்பாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது என்பதை மறைமுகமாக கூறி விட்டீர்கள். நன்றி. ஆனால், முரண்பாடுகளின் மொத்த உருவமாக நீங்கள் தான் உள்ளீர்கள். சினிமாவை பாராட்டுகிறீர்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் அடக்குமுறைக்கு ஆதரவாக உள்ளீர்கள்’’என்கிறார்.