தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது அவர் திமுக ஆட்சிக்கு வந்த 18 மாதங்களில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குளைந்து இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகு மூட்டைகளாக பழனிச்சாமி வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது,
அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலிலை சரிசெய்ய பாஜக தலைவர்களை சந்தித்த கையோடு ஆளுநரையும் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார்.
திடீரென ஞானோதயம் வந்தது போல் ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்துள்ளாதாகவும், தற்போது பாஜகவில் ஏற்பட்டுள்ள (காயத்திரி ரகுராம்- சூர்ய சிவா) உட்கட்சி பூசலை திசை திருப்புவதற்கான கருவியாக ஆளுநரை சந்தித்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஆளுநரை பழனிச்சாமி சந்தித்தது நாடகம் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெரு மழை பெய்த போதும் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்த திமுக அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. தமிழக முதல்வருக்கு வரும் பாராட்டுகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் காந்தாரி எண்ணத்துடன் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாக கூறினார்.
ஆளுநரிடம் வைத்துள்ள புகார்களுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று கூறிய தங்கம் தென்னரசு, ஆதாரம் இருந்தால் தாராளமாக நீதிமன்றத்தை நாடலாம் என்றும் ஆதாரம் இல்லாமல் புளுகு மூட்டைகளின் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சாடினார்.
கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 12 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டது போல் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக கூறினார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என்று அமைச்சர் பேசினார்.