இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டிப் படைக்கும் ஒரே கட்சி பாஜக தான்! அது ஒன்று தான் இன்றைக்கு தான் விரும்புகின்ற அரசியலை செய்து கொண்டுள்ளது. மற்ற கட்சிகளெல்லாம் பாஜக ஏவும் அஸ்திரங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியை மட்டுமே செய்கின்றன!
பாஜகவிற்கு உறுதியான கொள்கை பற்று உள்ளது. அந்த கொள்கைக்கான செயல் திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதை செயல்படுத்துவதற்கான ஆட்பலத்தையும், துணை சக்திகளையும் அது பெற்றுள்ளது.
காங்கிரஸ் ஒரு காலத்தில் சோசலிசம் பேசியது. ஆனால், பிற்காலத்தில் முதலாளித்துவத்தை செயல்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரத்தில் இருந்த பிற்போக்கு பிராமண லாபி காங்கிரசை மெல்ல, மெல்ல மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தியது. காங்கிரசுக்குள் லட்சியவாதிகள், கொள்கையாளர்கள் செல்வாக்கிழந்து, தரகு முதலாளித்துவ சக்திகள் கோலோச்சின. இவை நேருவின் குடும்ப செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு நாட்டை சுரண்டிக் கொழுத்தன. இவர்களை கையாளும் திறமையோ, கட்டுப்படுத்தும் வல்லமையோ நேரு குடும்பத்திற்கு இல்லை. இந்தச் சூழலே பாஜக வளர்ச்சிக்கு வித்திட்டது.
காங்கிரஸ் தான் மருத்துவக் கல்வியை முழுமையாக வணிகமயமாக்கும் நீட் தேர்விற்கு வித்திட்டது! சனாதனத்தை நுழைக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு வித்திட்டது. கார்ப்பரேட் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தது. காங்கிரஸ் போட்ட பாதையை அகலப்படுத்தி அசுர வேகத்தில் முன்னெடுத்தது பாஜக. சனாதனத்தை முழுமையாக சாத்தியப்படுத்துவதில் காங்கிரஸில் உள்ள முற்போக்கு சக்திகள் முட்டுக் கட்டை போட்டன. ஆகவே, இரண்டுங்கெட்டானாக காங்கிரஸ் திணறியது.
ஜனநாயகத்தின் பெயராலேயே ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து பழைய மன்னராட்சி பாணியிலான நவீன கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கான ஒரு ஆட்சியாக – பிராமண மேலாதிக்கத்தை இலக்காக கொண்ட – ஆனால், அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒற்றை அதிகார ஆட்சியாக பாஜக திகழ்கிறது. தங்கள் பாதையில் பயணிக்க துணை நிற்கும் அரசியல் சக்திகளை வாழ விடுவார்கள்! எதிர்க்கும் சக்திகளை பலவீனப்படுத்துவார்கள்!
காங்கிரஸ் கட்சியே பகுதி அளவுக்கு பாஜகவாக இருப்பதால் அதனால் வீரியத்துடன் பாஜகவை எதிர்க்க முடியவில்லை. ந்தியாவில் அனைத்து கட்சிகளின் தலைவிதியையும் தீர்மானிக்கும் சக்தியாக பாஜக கோலோச்சுகிறது. பாஜக இன்று இந்தியாவை ஆட்சி செய்கிறது…என்பதல்ல பெரிய விஷயம். அது மற்ற எல்லா கட்சிகளையும் தலை எடுக்கவிடாமல் ஒரு நரித்தந்திர அதிகார ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக சாதிக்கிறது என்பது தான் ஆபத்தானது.
பாஜகவை எதிர்ப்பதாக சொல்கின்ற மாநில கட்சிகள் யாவும் இன்று தங்களை தற்காத்துக் கொள்ள – மறைமுகமாக பாஜகவிற்கு துணை போகின்றன. மேலும் பாஜகவின் அரசியல் பாதையிலேயே தாங்களும் பயணிக்கின்றன.
பாஜகவை முரட்டுத்தனமாக எதிர்த்து முட்டி மோதிப் பார்த்த மம்தா பானர்ஜி தற்போது பாஜகவிற்கு அனுசரணையான அரசியலையே செய்கிறார். பாஜகவின் இந்துத்துவக் கொள்கையையே தானும் கடைபிடிக்கிறார்.
பாஜகவுக்கு சரிக்கு சரியாக சவால்விட்டு ஆட்சி நடத்திய அரவிந்த் கெஜ்ரிவாலும் பாதி சங்கியாக தன்னை மாற்றிக் கொண்டு தான் அரசியல் செய்தார். ஆனால், அவரது சீடரான பகவந்த் மானோ ஜெஜ்ரிவாலுக்கு நேர்ந்த கதி தனக்கு ஏற்பட்டுவிடக்கூடாதென பல விதங்களில் பாஜகவிற்கு அனுசரணையாக ஆட்சி செய்கிறார்.
பாஜகவின் பலமான சித்தாந்த எதிரியான இந்திய கம்யூனிஸ்டுகள் அதிகார யுத்தத்தில் அடையாளம் கரைந்து கொண்டுள்ளனர். பாஜகவின் தேசிய கல்வி கொள்கை அமலாக்கம், கார்ப்பரேட் நிறுவன வளர்ச்சிக்கான முறைகேடுகள் ஆகியவற்றை கேரளாவில் நடைமுறைப்படுத்தி வருகின்றது மார்க்சிஸ்ட் அரசு. ’’பாஜகவை பாசிச கட்சி எனச் சொல்வது பிழை’’ என்ற புதிய புரிதலை சமீபத்தில் தந்துள்ளது அந்தக் கட்சி. தமிழகத்தில் மார்க்சிஸ்டுகள் திமுகவின் அனைத்து அட்டூழியங்களையும் சகித்துக் கொண்டு போவதால், மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு வருகின்றனர்.
இந்திய அளவில் பாஜகவை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள கட்சியாக தோற்றம் காட்டி வரும் திமுக, தமிழகத்தில் பாஜகவின் அனைத்துவித மக்கள் விரோத சட்டங்களையும், திட்டங்களையும் அமலாக்கிக் கொண்டே பாஜகவை எதிர்ப்பது போல பாசாங்கு காட்டி வருகிறது. அதற்கு பரிசாக வரைமுறையற்ற ஊழல்களில் திளைக்கும் திமுக அரசையும், அதன் அமைச்சர்களையும் வெறுமனே ரெய்டு நடத்திவிட்டு, தற்போது தண்டிக்காமல் விட்டு வைத்துள்ளது பாஜக.
மற்றொரு பக்கம் அதிமுகவோ, பாஜகவின் சித்து விளையாட்டுகளால் கட்சிக்குள் புதிது புதிதாக முளைக்கும் துரோகத் தலைவர்களால் துவண்டு, எதிர்க்கத் திராணியின்றி தற்காப்பு அரசியல் செய்வதிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டுள்ளது.
அதிமுக தலைவர்களின் கடந்த கால ஊழல்கள், சொத்து குவிப்புகள் அவர்களை சரணாகதி அரசியலுக்குள் தள்ளிவிட்டது. சிறுகச் சிறுக பாஜகவிற்கு தன்னை தின்னக் கொடுத்து, சிதைந்து சின்னாபின்னமாகி வருகிறது அதிமுக!
புதிதாக உதயமான தமிழக வெற்றிக் கழகம் மாற்று அரசியலுக்கான செயல் திட்டமோ, சித்தாந்த தெளிவோ இல்லாத நிலையில் தப்பித் தவறி அதிகாரத்திற்கு வந்தால், அது தற்போதைய ஸ்டாலின் ஆட்சியை விட மோசமானதாகவே – அதிகாரிகளாலும், பாஜகவாலும் – ஆட்டிப் படைக்கப்படும் ஆட்சியாகத் தான் இருக்கும்.
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் எதுவுமே சர்வபரித் தியாகம் செய்யத் துணிவுள்ள, தெளிவான செயல் திட்டத்தை கொண்டதாக இல்லை. இதுவே பாஜகவின் பலமாகும். பாஜகாவினால் ஏதிர்காலத்தில் உண்டாகும் பேரழிவின் விளைவே, அதற்கு முடிவுரை எழுதும்!