தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் திமுக மற்றும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்தார். திராவிட மாடல் ஆட்சியை மக்கள் விரோத ஆட்சி எனக் கூறினார். 2026 தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் விஜய் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிவாண்டி வி.சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சி கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய்: திமுகவையும், பாஜகவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்களே தவெகவின் ஒரே முழு முதல் கொள்கை எதிரி. அடுத்த திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பெரியாரையும், அண்ணாவின் பெயரையும் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் நமது அடுத்த அரசியல் எதிரி என்று திமுக தான் என ஆளுங்கட்சியை மறைமுகமாக சாடாமல் டைரக்டாக அட்டாக் செய்து தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது அரசியல் கொள்கைகளை சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மறுபுறம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார் என அரசியல் விமர்சகர்கள் அடித்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்தது. இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் தருமபுரி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தருமபுரியில் நேற்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில், மாவட்ட தலைவர் நா.ப.சிவா தலைமையில் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் ‘‘வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுவார்’’ என தெரிவித்தார்.