நமக்கு நேரமில்லை, 2026 தேர்தல் பாஜகவிற்கு வாழ்வா சாவா என்ற நிலை. எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதத்திற்கு பிறகு தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆரத்தி எடுத்தும்.. பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சி மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
சென்னை, விழுப்புரம், மரக்காணம், திண்டிவனம் கடலூர் நாகை ஆகிய இடங்களில் மக்கள் மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் 120 மி.மி மழை பெய்துள்ளது. விழுப்புரத்தில் 400 மி.மீட்டரை தாண்டி மழை பதிவாகியுள்ளது. வரலாறு காணாத மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும் 20 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது. மக்கள் பெரிய அளவில் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
நாளையிலிருந்து விழுப்புரம், மரக்காணம், திண்டிவனம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சந்தித்து நிவாரண உதவி செய்ய உள்ளேன். இன்று பாஜக சார்பில் டெல்டா பகுதிக்கு ஒரு குழு அனுப்பப்பட உள்ளது. மழை பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.
மேலும் அடுத்த ஒரு வார காலத்திற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களத்தில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நமக்கு நேரமில்லை 2026 தேர்தல் வாழ்வா சாவா என்கிற தேர்தல். மக்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் கடுமையாக உழைத்து அதை நாம் கொடுக்க வேண்டும்.
மேலும் எச்.ராஜா சமூக வலைதளத்தில் போட்ட இரண்டு பதிவுகளுக்கு நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. கட்சி முழுமையாக எச். ராஜாவுக்கு துணையாக நிற்கும். நாங்கள் மேல் முறையீடு செய்வோம். அவர் சொன்னது வேறு.. சொல்ல வந்த விதம் வேறு. நாங்கள் நிச்சயம் மேல்முறையீட்டுக்கு செல்வோம் அதில் நிச்சயம் மாறுபட்ட நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.