90வது பிறந்த நாள் – முரசொலி மாறன் சிலைக்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் 90 வது பிறந்த நாளில் அவரது திருவுருவ சிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கலைஞரின் மனசாட்சியாக விளங்கியவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் மூளையாக செயல்பட்டவரும், ஒன்றிய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவருமாகிய முரசொலி மாறன் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 11மணியளவில் அயப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அ.ம. துரைவீரமணி தலைமையில் திமுக நிர்வாகிகள், அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள முரசொலி மாறன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் பின்னர் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தனர்.
பேட்டி:-
துரை வீரமணி பேசுகையில்,
முன்னாள் மத்திய அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மதுரையில் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைவரை தொடர்ந்து அயப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஐயா முரசொலி மாறன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தோம். ஐயா அவர்கள் மத்திய ஒன்றிய அமைச்சராக இருந்தபோது மிகவும் சிறப்பாக மக்களுக்காக செயல்பட்டார்.
பல்வேறு திட்டங்களை இந்திய அரசாங்கத்திற்கு பெற்றுத் தந்தவர். மேலும் வாஜ்பாயின் அன்பை பெற்றவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் நன்மதிப்பை பெற்றவர். மத்திய அமைச்சர் பதவிக்கு ஏற்றவாறு செயல்பட்டு இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கியவர். கலைஞரின் மனசாட்சியாக இருந்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். அவருக்கு என்றென்றும் நன்றிகூறும் வகையில் திராவிட முன்னேற்ற கழகமும், அதேபோன்று கழகத்தலைவர் வழியில் புகழஞ்சாலி செலுத்துகிறோம் என்று கூறினார்.