ராகுல் காந்தி மீது நடவடிக்கை – அமைச்சர் உதயநிதி கண்டனம்
அதானி குறித்து எழுப்பப்படும் கேள்விகளை விரும்பாமலும், அவற்றுக்கு பதில் அளிக்க முடியாததாலும் ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி, கைது நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றும் இந்த கைது நடவடிக்கையை கண்டிப்பதாகவும் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்மய சேவைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் யுமேஜின் (umagine) தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு மூன்று நாள் உச்சி மாநாட்டின் நிறைவு விழா நடைப்பெற்றது.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுடன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தொழில்நுட்பத்துறையில் பணியாளர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார்.
4,000 நிறுவனங்கள் 8,00,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் தகவல் தொழில் நுட்பத்துறை தமிழ்நாட்டில் இயங்கி வருவதாக உதயநிதி கூறினார்.
நவீன தொழில்நுட்ப உட்கட்டமைப்புகளை பள்ளிகளில் உருவாக்கி வருவதாக தெரிவித்த அவர், தங்கள் கண்டுபிடிப்புகளை இளைஞர்கள் வெளிப்படுத்த யுமேஜின் மாநாடு உதவியுள்ளதாக குறிப்பிட்டார்.
புத்தாக்க நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டுள்ள இந்த மாநாடு குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும்
தமிழக தகவல் தொழிட்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில்,
கடந்த காலங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை 7.75 லட்சமாக இருந்த தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் 10 லட்சமாக உயர்ந்துள்ளது என்றார்.
அமேசான், நிசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன என்றும் இந்த நிறுவனங்களால் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள், தகவல் தொழில்நுட்பத் துறையில் 25 லட்சம் பணியாளர்கள் இருப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதானியை பற்றி பேசுவதை பிரதமர் விரும்பவில்லை என்றார். அதற்கு பதில் அளிக்க முடியாதால் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சவாலை ராகுல் காந்தி சாமர்த்தியமாக சந்திப்பார் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.