நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா?
அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என்று முற்போக்கு அரசியல் பேசும் நடிகர் விஜயின் முயற்சி எடுபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜய் 10,12 ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை மாநிலம் முழுவதிலும் இருந்து வரவழைத்து பரிசு வழங்கி பாராட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை வரவழைத்து பரிசுகளை வழங்கி, பாராட்டி, அவர்களை உற்சாகப்படுத்தி, அறிவுரை வழங்கி அனுப்பி இருக்கிறார்.
நடிகர் விஜய் வழங்கிய அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது “அம்பேத்கர்,பெரியார்,காமராஜரை” படியுங்கள். அவர்களிடம் உள்ள நல்லக் கருத்துகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையற்றதை தூக்கி போட்டுவிடுங்கள் என்று பேசியுள்ளார்.
அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகிய தலைவர்களை மட்டும் குறிப்பிட்டு பேசி, அவர்களை மட்டும் படிக்க சொல்லி அறிவுரை வழங்கி இருக்கிறார் என்றால் அவருடைய அரசியல் பார்வையை புரிந்துக் கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டில் சினிமா ரசிகர் மன்றத்திற்கும், அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. ஒரு நடிகர் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது அவருக்கு போஸ்டர் ஒட்டவும், கட்டவுட் வைக்கவும், அந்த நடிகரைப் பற்றி பிரச்சாரம் செய்யவும் ரசிகர்கள் கிடைப்பது, அது அந்த நடிகருக்கு கிடைத்த முதல் வெற்றி. அவருடைய சினிமா வியாபாரத்திற்கு கிடைத்த வெற்றி.
அந்த ரசிகர்களுக்கு ஏற்றபடி சினிமாவில் அரசியல் வசனங்களை பேசியும், அவ்வப்போது அரசியல் ஆசைகளை தூண்டி விட்டும் அரசியலுக்கு அருகில் வைத்துக் கொள்வது, அதாவது தக்கவைத்துக் கொள்வது. இறுதியில் அந்த ரசிகர்களை எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த், கமலஹாசன் போன்று தன்னுடைய அரசியலுக்கு பயன்படுத்துவது. இப்படித்தான் தமிழ்நாட்டில் ரசிகர் மன்றங்கள் அரசியலாக்கப்படுகிறது. நடிகர் விஜயும் தன்னுடைய ரசிகர்களை இப்படித்தான் வழிநடத்தி வருகின்றார்.
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆருக்கும் மற்ற நடிகர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. அறிஞர் அண்ணா தொடங்கிய திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட எம்ஜிஆர், திமுகவின் கொள்கைவாதியாக மக்களிடம் அறிமுகம் ஆனார்.
அவர் 1972ல் கட்சி தொடங்கும்போது பெரியார், அண்ணாவின் கொள்கைகள், அண்ணாவின் தொண்டர்கள் எம்ஜிஆரின் வெற்றிக்கு உதவியது. ஒரு அரசியல் கட்சியில் வேலை பார்த்த அனுபவமோ, கொள்கையோ சிவாஜி, விஜயகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு அமையவில்லை. நடிகர் விஜய்க்கு அதுபோன்ற வாய்ப்பு அமையாவிட்டாலும் அவருடைய அரசியல் பார்வை தெளிவாக இருக்கிறது.
அவர் முன்உதாரணமாக எடுத்துக் கொண்ட தலைவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகிய மூன்று தலைவர்களும் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்கள். ஏற்றத் தாழ்வுகளை களைவதற்கு போராடியவர்கள். சமதர்மத்தை போதித்தவர்கள்.
அந்த தலைவர்களை தனது அரசியல் வழிகாட்டிகளாக நடிகர் விஜய் எடுத்துக் கொண்டார் என்பது இன்றைய நிகழ்ச்சியின் வாயிலாக தெளிவுப் படுத்திவிட்டார். இதன் மூலம் காவி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்கப்போகிறார் என்பதை தெளிவுபடுத்தி விட்டார். ஆனால் விஜயின் அரசியல் எந்த அளவிற்கு எடுபடும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.