“திருமாவின் அறிவுக்கு உட்பட்டே ஆதவ் எல்லாமே பண்ணுகிறார். விஜய் மேடையில் ஆதவ் நின்றதும், பேசியதும் ஒன்றும் ஏதோ திடீரென நடந்த விஷயங்கள் கிடையாது. பல மாதங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றுதான். அங்கே அவர் என்ன பேசப்போகிறார் என்பதும் கூட திருமாவுக்கு நன்கு தெரியும். திருமா ஏதோ ஒரு அரசியல் கணக்குக்கு வந்துவிட்டார். இளைஞர் மற்றும் நடுத்தர வயது நபர்களின் வாக்கு வங்கியின் அமோக ஆதரவு இருந்தும் கூட தனித்து நிற்க தயங்கும் விஜய்யோடு கைகோர்க்க தயாராகிவிட்டார் திருமா.
அதனால் ஆதவ்வை விட்டு ஆழம் பார்க்கிறார். இப்படி குடைச்சல் கொடுத்தால் திமுகவே தன்னுடன் மோதி வெளியேற்றும் அப்புறம் பாதுகாப்பாக விஜய்யோடு கூட்டு வைக்கலாம்! என்பதே திருமாவின் பிளான்களில் ஒன்று. அதனால் ஆதவ்வை இப்போது இவர் தள்ளி வைப்பது போல் வைக்க, அவர் கோபப்பட்டு விஜய்யிடம் போய் சேரும் வாய்ப்பு அதிகம். அங்கிருந்தபடியே திருமா மற்றும் விஜய்க்கு இடையில் அரசியல் பாலமாக செயல்படுவார். இதை வைத்து தேர்தல் நெருக்கத்தில் திருமா தன் வேலையை காட்டுவார்” என பலவாறு விவாதங்கள் கிளம்பின.
ஆனால் இப்போது இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனாவுக்கு ஏதோ செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் “விஜய் மாநாடு நடத்திய சில நாட்களிலேயே நான் வர முடியாது என்று புத்தக விழாவை ஏற்பாடு செய்த நிறுவனத்திடம் சொல்லிவிட்டேன். யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்து என்னை மாற்ற முடியாது என்பதை ஏற்கெனவே தெளிவுபட சொல்லிவிட்டேன். இதை மீண்டும் மீண்டும் சொல்வது ஏற்க முடியாதது.
இடைநீக்கம் செய்தால் மேற்கொண்டு அதைப் பற்றி பேசக் கூடாது என்பது விதி. இந்த கட்சியில் மீண்டும் தொடர வேண்டும் என்றால் இதுபோன்று பேசக் கூடாது. அதையும் மீறி பேசுவதை பார்க்கும்போது ஆதவ் அர்ஜூனாவுக்கு ஏதோ செயல்திட்டம் இருக்கிறது என்று தெரிகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பா என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த திருமாவளவன், “கண்டிப்பாக கிடையாது. அது ஒரு நடைமுறை. எடுத்ததும் ஒருவரை கட்சியில் இருந்து தூக்கிவிட முடியாது. என்ன என்று ஆராய்ந்து பார்த்துதான் நடவடிக்கை எடுக்க முடியும்.” எனத் தெரிவித்தார்.